பதிவு செய்த நாள்
20
பிப்
2025
12:02
திருநெல்வேலி; பாளை ராமசுவாமி கோயில் மாசித்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பாளையில் பழமை வாய்ந்த ராமசுவாமி கோயில்அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 10ம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடந்துவருகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடந்தது. அறநிலையத்துறை உதவியுடன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் செலவில் உபயதாரர் சத்தியநாராயணன் உதவியுடன் திருத்தேர் செய்யும் பணிகள் நடந்தன. 14அடி உயரம், 8 அடி அகலத்தில் 2 டன் எடைகொண்ட புதிய தேர் செய்யப்பட்டது. இந்ததேரின் வெள்ளோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாசித்திருவிழாவின் 9வது நாளான நேற்று புதிய தேரில் சுவாமி எழுந்தளச்செய்யப்பட்டு மாசித்தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுத்தனர். நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் செல்லையா, தேர் உபயதாரர் சத்தியநாராயணன், திமுக மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ், கவுன்சிலர் கோகுலவாணி, காங்., இளைஞரணி ராஜீவ்காந்தி உட்படபலர் கலந்து கொண்டனர். புதிய தேர் ராமசுவாமி கோயில் மாடவீதி மற்றும் பெருமாள் கோயில் ரதவீதிகளில் வலம் வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது. புதிய தேர் செய்யப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.