மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தேர் கட்டும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2025 10:02
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் உற்சவத்திற்காக புதிய தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 13 நாள் மாசி பெருவிழா இம்மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 27ம் தேதி மயானகொள்ளையும், 2ம் தேதி தீமிதி விழாவும், 4ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. மேல்மலையனுார் கோவில் புராணத்தின் படி மயானக்கொள்ளையன்று விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் ஒன்று கூடி தேரின் பாகங்களாக மாறி விழா எடுக்கின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் வடிவமைக்கின்றனர். இந்த ஆண்டு புதிய தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிலையாக செய்து வைத்துள்ள தேர் சக்கரம், பீடம், கலசம் தவிர்த்து மீதம் உள்ள பாகங்களை பச்சை மரங்களை கொண்டு வடிவமைக்கின்றனர். பாரம்பரியமாக இக்கோவிலுக்கு தேர் வடிவமைக்கும் தச்சு தொழிலாளர்கள் இப்பணியை செய்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் அறங்காவலர்கள் தேர்கட்டும் பணியை மேற்பார்வை செய்து வருகின்றனர்.