தப்பு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற பயம் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் மற்ற தெய்வங்களில் இருந்து மாறுபட்டவர். மலைக்கோயில் குன்றின் மீது, இவரது சிலை வடிக்கப்பட்டுள்ளது. மலையில் செதுக்கப்பட்ட இறைவடிவங்களுக்கு சக்தி அதிகம் இருப்பதாக ஆகமசாஸ்திரம் கூறுகிறது. மற்ற விநாயகர்களுக்கு தும்பிக்கை நீங்கலாக நான்கு கரங்கள் இருக்கும். இவருக்கோ இரண்டு கரங்கள் மட்டுமே உள்ளன. பத்மாசனமாக காலை மடித்து யோகநிலையில் இருந்து, யோகபலன்களை வாரி வழங்குகிறார். இவருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை தண்டனை. யாரையும் தண்டிக்கும் எண்ணம் இல்லாமல், தவறுகளை மன்னிக்கும் குணம் உள்ளவர் என்பதால் தண்டனைக் கருவிகளான பாசம், அங்குசம் ஏந்தாமல் இருக்கிறார். சடைமுடி, கங்கை, மூன்றுகண், இளம்பிறை ஆகிய சிவ அம்சத்துடன் விளங்கும் இவர், கற்பக மரம் போல கேட்டவரம் அருள்பவராக விளங்குகிறார். இதனால் கற்பக விநாயகர் என்று பெயர் பெற்றுள்ளார். இவரைத் தரிசித்தால் பிறர் நமக்குச் செய்த துரோகத்தைக் கூட மன்னிக்கும் பக்குவகுணம் வளரும்.