பதிவு செய்த நாள்
27
பிப்
2025
10:02
தஞ்சாவூர்; நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது மகாசிவராத்திரி. சிவபெருமானை விட்டு பிரியாத சக்தி அனைத்து உயிர்களும் உயர்வு பெற நான்கு காலங்களும் சிவனை பூஜித்த காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தஞ்சை பெரியகோவிலில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு நேற்று இரவு 10 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று மாலை முதலே பக்தர்கள் வந்து தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் மட்டும் அல்லாமல் விடிய, விடிய பக்தர்கள் சிவனை வழிபட்டனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
விழாவில் பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரதநாட்டியம், பக்தி இசை, நாதலய சங்கமம், பட்டிமன்றம், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த கலை நிகழ்ச்சிகளை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோனஸ்லே, உதவி ஆணையர் கவிதா, சதயவிழாக்குழு தலைவர் செல்வம் மற்றும் பலர் பார்த்து ரசித்தனர்.