பதிவு செய்த நாள்
27
பிப்
2025
10:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. (புதன்கிழமை) அதிகாலை இரண்டு மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, கோ பூஜைப் பிறகு சுப்ரபாத சேவைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து பக்தர்களுக்கு அதிகாலை மூன்று மணி முதல் நாள் முழுவதும் சர்வ தரிசனம் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களுக்காக கோயில் ராஜகோபுரம் அருகே இலவச தரிசன செய்ய வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ரூ.200 மற்றும் ரூ.500 டிக்கெட்கள் உள்ள பக்தர்களுக்காக சிறப்பு வரிசைகள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். மகாசிவராத்திரி பர்வ தினத்தில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு குடிநீர், மோர், மற்றும் குழந்தைகளுக்கு பால் பிஸ்கட் வழங்கினர். பக்தர்களுக்கு பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று புதன்கிழமை மகா சிவராத்திரி அன்று அதிகாலை 3 மணி முதல் இன்று வியாழக்கிழமை 4 மணி வரை சிவபெருமானுக்கு மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு தொடர்ந்து 11 கால அபிஷேகங்கள் நடைபெற்றன. சிவராத்திரி அன்று காலை 11மணிக்கு இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் விநாயகர் எலி வாகனத்தில், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரர் மற்றும் பக்தகண்ணப்பர் சப்பரங்களில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வருகையில் நாட்டுப் புற கலைஞர்கள், கோலாட்டங்கள், (மரத்தாலான) பஜனைகள், வேத (பண்டிதர்கள் )மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. கோயில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் சிவராத்திரியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, தங்கள் முன்னோர்களுக்கு நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.