அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2025 10:02
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.
காசியில் வாசி அவிநாசி என போற்றுதலுக்குரிய தலமாகவும், கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். நேற்று சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில்,பிரதிமாலிங்கத்திற்கு 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இரவு 9 முதல் 9.30 மணி வரை முதல் கால பூஜையும், இரவு 11 முதல் 11:30 மணி முதல் இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 1 முதல் 1.30 மணி வரை மூன்றாம் கால பூஜையும்,அதிகாலை 3 முதல் 3.30 மணி வரை நான்காம் கால பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உஷத்காலம் (விளா பூஜை) பூஜை காலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பிரதிமாலிங்கத்திற்கும், உற்சவம் மூர்த்திகளுக்கும் 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மஹா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் வரிசையில் இன்று தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாக தரப்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. மஹா சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர். மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல அவிநாசி நாரசா வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெற்று அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.அவிநாசி அடுத்த பழங்கரை ஸ்ரீ சுரும்பார் பூங்குழல் நாயகி ஸ்ரீ பொன் சோளீஸ்வரர் ஸ்ரீ நித்திய கல்யாணி சீனிவாச பெருமாள் கோவிலில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.