பதிவு செய்த நாள்
27
பிப்
2025
10:02
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவ பக்தர்களின் ருத்ர ஜபத்துடன் மகா சிவராத்திரி விழா இரவு முழுவதும் நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகளுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. காலை மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜைகளுடன் மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யோகேஷ்வரி சமேத அந்தகாசூர சம்காரமூர்த்தி ஆலய பிரதட்சனமாக வலம் வந்தனர். இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 1:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 3:00 மணிக்கு நான்காம் கால பூஜை என நான்கு கால பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு காலத்திற்கும் மூலவருக்கு பலவித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. சிவபக்தர்கள் ஸ்ரீருத்ரம் ஜபம், சிவபுராணம் வாசிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நாதஸ்வர இன்னிசை, திருவருட்பா இசையமுது, பரதநாட்டியம், உடல் வாத்தியம், சிவ பஜனை என இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.