மாசி அமாவாசை தர்ப்பணம்: நாவா முகுந்தர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2025 03:02
பாலக்காடு; நாவா முகுந்தர் கோவிலில் மாசி மாத அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே பாரதப்புழை ஆற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற நாவா முகுந்தர் கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலின் மறுகரையில், பிரம்மா மற்றும் சிவன் கோவில்கள் அடுத்தடுத்து உள்ளன. இக்கோவிலில், ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வருவது வழக்கம். இந்த நிலையில், மாசி மாத அமாவாசை நாளான இன்று ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அதிகாலை 3:00 மணிக்கு தர்ப்பண நிகழ்ச்சிகள் தொடங்கின. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பிறகு மூலவரையை தரிசித்து திலகஹோம், சாயூஜிய பூஜை, தாமரை மாலை சமர்ப்பணம் ஆகியவை செய்து பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தர்ப்பணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் செய்திருந்தனர்.