பதிவு செய்த நாள்
27
பிப்
2025
02:02
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நடந்த ஐந்து கால பூஜைகளில் பக்தர்கள் கண்விழித்து பங்கேற்றனர்.
குன்னுார் ஜெகதளா அமுத லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகளுடன் பூஜைகள் நடந்தது. ‘மாலை, 6:00 மணி; இரவு, 9:00 மணி; நள்ளிரவு, 12:00 மணி; அதிகாலை, 3:00 மணி; இன்று காலை, 6:00 மணி,’ என, ஐந்து கால பூஜைகள் நடந்தன. அதில், சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், இடம்பெற்றது. இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து பஜனை பாடல்கள் பாடியும், நடனமாடியும் கொண்டாடினர். காலை கோவிலில் துவங்கிய தேர் ஊர்வலம், விநாயகர் கோவில், கிருஷ்ணர் கோவில், அம்மன் கோவிலுக்கு சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் பூஜைகள் வழங்கி வழிபட்டனர். பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
* அருவங்காடு ஐயப்பன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. நீண்ட ஆயுள், நிறைந்த ஆரோக்கியம், நிறைவான செல்வம், உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு உலக நன்மைகளுக்காக ஹோமம் நடத்தி, மிருத்யுஞ்சய மந்திரம் ஓதி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் ஓம் நமச்சிவாய கூறி திரளாக பங்கேற்றனர். கோவில் மேல் சாந்தி அம்பாடி விஜயன் ஹோம பூஜைகள் செய்தார்.
* தாம்பட்டி மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஐந்து கால பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அருவங்காடு செட்டியார் காலனி முனீஸ்வரர் சிவன் கோவிலில், சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை, சிறப்பு அலங்காரத்தில் சிவன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும், ஓட்டுப்பட்டறை, ஸ்டேன்லி பார்க் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* கூடலுார் தேவர்சோலை சிவசங்கரன் கோவிலில் நந்த சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் பங்கேற்ற தேர் ஊர்வலத்தில் இடம் பெற்ற ‘ரோபோடிக்’ யானை பக்தர்களை கவர்ந்தது. ஊர்வலத்துக்கு பின்பு, இரவு, 8:00 மணிக்கு பூஜைகள் நடந்தது. மேலும், நள்ளிரவு முதல் அதிகாலை நடந்த பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* ஊட்டி பிரம்மகுமாரிகள் மையத்தில், சிவராத்திரியை முன்னிட்டு கேதார்நாத் கோவிலில் உள்ள போன்ற மாதிரி லிங்கம், அடுத்த மாதம், 10ம் தேதி வரை பக்தர்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை உள்ளூர் மக்கள் பார்வையிட்டு பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இதேபோல, மாவட்ட முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் இன்று அதிகாலை வரை நடந்த பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்றனர்.