பதிவு செய்த நாள்
03
மார்
2025
11:03
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பத்து நாட்களுக்கு பிரசித்தி பெற்ற மாசிமக பெருவிழா நடைபெறும்.
இந்நிலையில் மாசிமகத்தை முன்னிட்டு,காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கொடிமரத்திற்கு எண்ணெய் காப்பு சாற்றி மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் நந்திபெருமான் திருவுருவம் வரையப்பட்ட திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு சுவாமிகளுக்கும் கொடி மரத்திற்கும் கோபுர ஆர்த்தியும், பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கௌதமேஸ்வரர் மற்றும் அபிமுகேஸ்வரர் என மேலும் 4 சைவத் திருத்தலங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. மாசி மக பெருவிழாவையொட்டி தினமும் காலை மாலையில் சூரியப்பிரபை, சந்திரப்பிரபை, பூத வாகனம், கிளி வாகனம், யானை வாகனம், சிம்மவாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் தேதி திருக்கல்யாணமும், 11ம் தேதி திருத்தேரோட்டம், 12ம் தேதி 12 சைவத்தலங்களில் இருந்து உற்சவ சுவாமிகள் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருள, மாசி மக தீர்த்தவாரி நடைபெறுகிறது.