பதிவு செய்த நாள்
03
மார்
2025
11:03
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மஹா தீபாராதனை நடந்தது. நேற்று வார விடுமுறை நாள் மற்றும் முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக காலை முதலே மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று கொளுத்தும் வெயிலில் பக்தர்கள், பொது வழியில் மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து, இரண்டு மணி நேரத்திற்கு பின் மூலவரை தரிசனம் செய்தனர். அதேபோல், 100 ரூபாய் தரிசன கட்டணத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். பெரும்பாலான பக்தர்கள் இருசக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் வாயிலாக சென்றதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, திருத்தணி போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் வானங்கள் செல்ல தடைவிதித்து, நீதிமன்றம் பின்புறம் அனுப்பி வைத்தனர். பக்தர்கள் அங்கிருந்து நடந்து சென்றும், சிலர் ஆட்டோ மற்றும் கோவில் சார்பில் இயக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டனர். வெயிலின் தாக்கத்தை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் நீர்மோர், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
பவானியம்மன் கோவில்; பெரியபாளையத்தில் உள்ள பவானியம்மன் கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம், காலையில் இருந்தே அதிகளவில் இருந்தது. பக்தர்கள் சிலர் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற உடுக்கை, பம்பை வாத்தியங்களுடன், கரகம் எடுத்து கோவிலை வலம் வந்தனர். அங்குள்ள புற்றுக்கோவிலிலும் பக்தர்கள் அதிகளவு இருந்தனர். கூட்டம் அதிகளவில் இருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பெரியபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.