பாலக்காடு பெருமாள் சுவாமி கோவிலில் பூ மிதிக்கும் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2025 03:03
பாலக்காடு; பெருமாள் சுவாமி கோவிலில் சிவராத்திரி மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
கேரள மாநிலம் பாலக்காடு அய்யப்புரம் பகுதியில் உள்ளது பெருமாள் சுவாமி கோவில். இங்கு எல்லா ஆண்டும் சிவராத்திரி மகோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் கடந்த பிப்., 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் சிறப்பு நாளான நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நிர்மால்லியதரிசனம், 4:45 மணிக்கு வாகச்சார்த்து, 5:00க்கு மகாகணபதி ஹோமம், 8:30 மணிக்கு கல்பாத்தி ஆற்றில் இருந்து செண்டை மேளம் முழங்க தீர்த்தம் கொண்டு வரும் வைபவம் ஆகியவை நடந்தது. 12:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், புஷ்பாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00க்கு நிறமாலை, பக்தர்கள் சுற்று விளக்கேற்றி வழிபடும் நிகழ்வு, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சவம் மூர்த்திகள் எழுந்தருளி அலங்கரித்த சிறப்பு கொலு மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தன. இரவு 11:00 மணிக்கு தாலம் எடுப்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை 4:30 பக்தர்கள் பூ மிதிக்கும் வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. இதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். நடக்கும் பட்டாபிஷேகம் நிகழ்வுடன் உற்சவம் நிறைவடைகிறது.