பதிவு செய்த நாள்
12
மார்
2025
10:03
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா 10ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதிலும் குறிப்பாக கந்த சஷ்டி திருவிழா, வைகாசி விசாக திருவிழா, பங்குனி உத்திரம், திருகார்த்திகை, மாசி திருவிழா உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் மாசி திருவிழா மார்.,3ல் கொடியேற்றதுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருநாள் தேரோட்டம் இன்று (12ம் தேதி) நடைபெற்றது. முன்னதாக தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்கு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷமிட்டனர். விநாயகர், சுவாமி, அம்பாள் தனி தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். 11 ஆம் திருநாளான நாளை இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.