பதிவு செய்த நாள்
12
மார்
2025
05:03
திருப்புத்துார்; சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் மாசி தெப்ப உத்ஸவம் மார்ச் 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இன்று காலை வெண்ணெய்தாழி சேவை,தெப்பம் முட்டுத்தள்ளுதல், நாளை காலை பகல் தெப்பம் மற்றும் இரவு தெப்பம், மார்ச் 15 ல் தீர்த்தவாரியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கோயிலில் நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனமும், தெப்பக் குளத்தைச் சுற்றிலும் பெண்கள் விளக்கேற்றியும் வழிபட்டு வருகின்றனர். இன்று மழை பெய்த போதும் நனைந்து கொண்டே பெண்கள் தீப வழிபாடு நடத்தினர்.
இந்த ஆண்டு உற்ஸவம் துவங்கிய முதல் நாள் முதல் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இருப்பினும் அதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யப்பட வில்லை. கன மழை அறிவிப்பு வந்தும் வழக்கமாக வாகன நிறுத்தமாக செயல்படும் வயல்களுக்கு பதிலாக மாற்று இடம் தேர்வு செய்யப்படவில்லை. வயலில் மழைநீர் சேர்ந்து சகதியானதால் வாகனங்கள் நிறுத்த முடியவில்லை. இதனால் ரோட்டோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நேற்று காலை முதல் திருப்புத்துார் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
போதிய அளவில் போலீசாரும் இல்லாததால் போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் திணறினர். திருக்கோஷ்டியூரிலிருந்து மூன்று கி.மீ.நீளத்திற்கு திருப்புத்துார் ரோட்டில் வாகனங்கள் நகர்ந்தன. சரியான வாகன நிறுத்தம் இல்லாத நிலையில் கடந்த சில நாட்களாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வாகன நிறுத்தத்திற்கு வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். காருக்கு ரூ 30க்கு பதிலாக ரூ 100, வேனுக்கு ரூ50க்கு பதிலாக ரூ 150, பஸ்சுக்கு ரூ 70க்கு பதிலாக ரூ 200 வசூலித்ததாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் வருகைக்கேற்ப போக்குவரத்தை கட்டுப்படுத்த போதிய திட்டமிடல் இல்லாததால் எட்டாம் திருநாளிலேயே போக்குவரத்து நெருக்கடி உருவாகி விட்டது. லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் இந்த விழாவிற்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் முன்னேற்பாடு செய்யத் தவறியதால் நேற்று பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர், அடுத்த மூன்று நாட்களில் மேலும் அதிகமான பக்தர்கள் வர உள்ளநிலையில் அதிகாரிகள் இனியாவது சரியான திட்டமிடல் செய்து பக்தர்கள் எளிதாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவத்திற்கு வந்த பக்தர்கள் இன்று காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடியில் தவித்தனர். சரியான வாகன நிறுத்தம் இல்லாமல் ரோட்டில் வாகனங்களை நிறுத்தியதால் நெருக்கடியால் மூன்று கி.மீ.துாரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.