பதிவு செய்த நாள்
13
மார்
2025
12:03
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே பெருவயல் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயிலில் மாசி உற்ஸவவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் மாசி மாசி உற்ஸவ விழா மார்ச் 2ல் துவங்கி மார்ச் 13 வரை நடக்கிறது. விழாவில் தினமும் பல்லக்கு, அன்னம், மேஷம், பூதம், யானை, மயில், குதிரை, புஷ்ப வாகனத்தில் சுவாமி உலா வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிேஷகம்செய்து மலர் அலங்காரத்தில் திருத்தேரேற்றம் செய்து காலை 10:30 மணிக்கு ஊரின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (மார்ச் 13) தீர்த்தவாரி நடக்கிறது. இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி உலாவுடன் விழா நிறைவடைகிறது. *கீழக்கரை தட்டான் தோப்பு தெரு நாராயண சுவாமி கோயிலில் உள்ள பூரண, புஷ்கலா, அய்யனார் சன்னதியில் மாசி மகத்தை முன்னிட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி ராஜப்பிரியன், ஜெய்கணேஷ், ஹிந்து நாடார் உறவின்முறை தலைவர் ஜெயமாரி, அம்பலம் பாலச்சந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
*திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில்மாசி மகத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாகம்பிரியாள் பாதயாத்திரை குழுவை சேர்ந்த நாகநாதன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். முன்னதாக பாகம்பிரியாள், வல்மீகநாதர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து சிவாச்சாரியார் வல்மீகநாதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
*பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள வள்ளி, தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மக விழா நடந்தது. தீர்த்த குடம் புறப்பாடாகி, மூலவருக்கு கும்ப அபிஷேகம், புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. இரவு முக்கனி பூஜை நடந்தது. பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் நேற்று காலை பக்தர்கள் வைகை ஆற்றில் பால்குடம் எடுத்தனர். பின்னர் பெருமாள் கோயில் படித்துறையில் இருந்து பால்குடங்கள் புறப்பாடாகி கோயிலை அடைந்தது. அங்கு அரோகரா கோஷம் முழங்க சண்முகருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.
*திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. நேற்று மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் உற்ஸவமூர்த்தி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார்.