பதிவு செய்த நாள்
13
மார்
2025
01:03
மாமல்லபுரம்; இருளர் பழங்குடியினர், பாரம்பரிய குலதெய்வ வழிபாட்டிற்காக, மாமல்லபுரம் கடற்கரையில் முகாமிட்டு உள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பகுதிகளில், இருளர் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர்.
நம்பிக்கை; பாம்பு பிடிப்பது, மூலிகை மருந்து தயாரிப்பது, விறகு சேகரிப்பது உள்ளிட்டவை இவர்களின் பாரம்பரிய தொழில். தற்காலத்தில் செங்கல் சூளை, அரிசி ஆலை உள்ளிட்டவற்றில், கூலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இவர்கள், தங்களின் குலதெய்வமான கன்னியம்மன், வங்க கடலில் வீற்றுள்ளதாக நம்புகின்றனர். எனவே, ஆண்டுதோறும் மாசி மகம் நாளில், மாமல்லபுரம் கடற்கரையில் கன்னியம்மனை வழிபடுவர். இதற்காக சில நாட்களுக்கு முன்பே குடும்பத்தினர், உறவினருடன், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் கூடுவர். கடற்கரையில் திறந்தவெளியில் சிறு குடில்கள் அமைத்து முகாமிட்டு, மாசிமக நாளில் தங்களின் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுவர். மேலும், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர்களுக்கு, தங்களின் பாரம்பரிய சடங்குகள் நடத்தி, திருமணம் செய்வர். குழந்தைகளுக்கு முடி நீக்கி, காது குத்துவர். பிற வேண்டுதல்களையும் இங்கேயே நிறைவேற்றுவர்.அந்த வகையில், மாசி மகமான நாளை, பாரம்பரிய வழிபாட்டிற்காக, தற்போது இருளர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் முகாமிட்டு உள்ளனர்.
அடிப்படை வசதிகள்; இவர்களுக்காக நகராட்சி நிர்வாகம், தற்காலிக குடிநீர், கழிப்பறை ஆகிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் முகாமிடும் காலத்தில் மழை பெய்யாமல், இயல்பு வானிலை நிலவும். கடந்த இரண்டு நாட்களாக, அவ்வப்போது மழை பெய்யும் நிலையில், திறந்தவெளியில் தங்கியுள்ள அவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். முன்னதாக, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பல ஜோடியினர், வழக்கத்திற்கு மாறாக, நேற்று காலையே வழிபாட்டு சடங்குகளை நடத்தி, திருமணம் செய்தனர்.