பதிவு செய்த நாள்
13
மார்
2025
06:03
திருப்புத்துார்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். நாளை மதியம் பகல் தெப்பமும், இரவில் தெப்பம் வலம் வருதல் நடைபெறும். நாளை மறுதினம் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடையும்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மாசி தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். மார்ச் 5 ல் காலை கொடியேற்றி, மாலையில் காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது. தினசரி பக்தர்கள் தெப்பக்குளக்கரையில் விளக்கேற்றி வழிபட்ட பின்னர் கோயிலுக்கு வந்து சயன கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவரை தரிசித்தனர். நேற்று அதிகாலை 1:00 மணி வரை சாமி தரிசனம் நடந்தது. பின்னர் நடை சாத்தப்பட்டு, அதிகாலை 3:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. எட்டாம் நாளில் அரண்மனை மண்டகப்படி நடந்து குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. நேற்று ஒன்பதாம் நாளை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டார். தொடர்ந்து தெப்பக்குளத்திற்கு சென்று மண்டபத்திற்கு முன் எழுந்தருள தீபாராதனை நடந்தது.
மதியம் மீண்டும் பெருமாள் புறப்பாடு ஆகி தெப்பக்குளக்கரை எழுந்தருளி வெள்ளோட்டமாக தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடந்தது. மீண்டும் மண்டபத்திற்கு முன் சுவாமி எழுந்தருளினார். இரவில் வெண்ணெய்தாழி கண்ணன் அலங்காரத்திலேயே பெருமாள் திருவீதி உலா நடந்து கோயில் சேர்க்கையானார். நாளை பத்தாம் திருநாளை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் புறப்பாடு ஆகி தெப்பமண்டபம் எழுந்தருளுவார். பின்னர் மதியம் தெப்பத்தில் எழுந்தருளி மதியம் 12:16 மணி அளவில் பகல் தெப்பம் வலம் வரும். பின்னர் மீண்டும் பெருமாள் தெப்பமண்டபம் எழுந்தருளுவார். மீண்டும் இரவு 9:00 மணிக்கு தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி இரவு தெப்பம் கண்டருளல் நடைபெறும்.