பதிவு செய்த நாள்
18
மார்
2025
11:03
மைசூரு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது, அங்கு உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், அரண்மனைகள் தான். ஆனால் மைசூரு மாவட்டத்தில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. மைசூரில் இருந்து 60 கி.மீ., துாரத்தில் உள்ளது தண்டிமாலங்கி என்ற கிராமம். இந்த கிராமத்தில் லட்சுமி ஜனார்த்தன் என்ற பழங்கால கோவில் உள்ளது. இக்கோவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று பக்தர்கள் கூறினாலும், சோழர்கள் காலத்திலேயே கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோவிலின் கட்டட கலை மிகவும் நுணுக்கமாக இருக்கும். கோவிலை மொத்தம் 52 துாண்கள் தாங்கிப் பிடிக்கின்றன.
இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றால், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் நீங்கும் என்று தண்டிமாலங்கி, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இதனால் மைசூரு, சாம்ராஜ்நகர், குடகின் தலைக்காவிரி பகுதியில் இருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து, சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தண்டிமாலங்கி கிராமம் தலைக்காவிரிக்கு அருகில் அமைந்து இருப்பதால், அங்கு வரும் சுற்றுலா பயணியர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இக்கோவிலை சுற்றி காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் 15ம் தேதி மேற்பட்ட, பழங்கால கோவில்களும் உள்ளன. லட்சுமி ஜனார்த்தன் கோவிலுக்கு செல்வதன் மூலம், மேலும் சில கோவில்களையும் பார்க்கும் வாய்ப்பும் உண்டு. பழங்கால கோவில் என்பதால் சில ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் செலவில் கோவிலை புனரமைத்து உள்ளனர். அர்ச்சகர் துரைராஜ் சக்ரவர்த்தியை 99722 74150 என்ற மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். தினமும் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை, கோவில் நடைதிறந்து இருக்கும். பெங்களூரில் இருந்து 210 கி.மீ., துாரத்தில் தண்டிமாலங்கி கிராமம் அமைந்துள்ளது.
எப்படி செல்வது?; பெங்களூரு சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து, மைசூருக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. மைசூரு பஸ் நிலையம் சென்று அங்கிருந்து, வேறு பஸ்சில் தண்டிமாலங்கி கிராமத்தை சென்று அடையலாம்.ரயிலில் சென்றால் மைசூரு ரயில் நிலையம் சென்று, அங்கு இருந்து பஸ்சில் செல்ல வேண்டும். – நமது நிருபர் –