பதிவு செய்த நாள்
20
மார்
2025
05:03
பந்தலூர்; நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில், மைசூரை ஆண்டு வந்த திப்பு சுல்தான் படை எடுப்பின் போது, தகர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்களில் இதுவும் ஒன்று. கோவிலுக்கு சொந்தமாக குளம் மற்றும் குளத்தில் இருந்து கோவிலுக்கு வருவதற்கான நடைபாதை அமைந்துள்ளது. கோவில் முன்பாக நூற்றாண்டு பழமையான அரச மரமும் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் 18 கோவில்கள் உப கோவில்களாகவும், எருமாடு சிவன் கோவிலே, இவற்றின் தலைமை கோவிலாகவும் இருந்துள்ளது. இந்தக் கோவிலில் நடத்தப்பட்ட சிவப்பிரசனத்தில், 1600 ஆண்டுகள் பழமையான கோவில் என்பது தெளிவாகியுள்ளதுடன், விவசாயிகள் மூலம் கோவில் கட்டுமான நடந்துள்ளது.
கடந்த 1982 ஆம் ஆண்டு கோவில் பின்பகுதியில் இஸ்லாமியரின், சடலத்தை புதைத்ததால்,எழுந்த பிரச்சினையையடுத்து, கோவில் பூஜைகளை நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், மயானத்தை தனியாக பிரித்து மதில் சுவர் கட்டப்பட்டது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், 1984 ஆம் ஆண்டு கோவில் நிலம் கோவிலுக்கு உரியது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து இந்தப் பகுதியை அப்போதைய மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாஹூ நேரில் ஆய்வு செய்து, இஸ்லாமியர்களுக்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய இடத்தை ஒதுக்கி கொடுத்ததுடன், கோவிலை ஒட்டிய மைதானத்தை சிவராத்திரி விழாக்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள உத்தரவிட்டார். கடந்த 2005 ஆம் ஆண்டு மா.கம்யூ., நிர்வாகி அச்சுதானந்தன் இந்தப் பகுதிக்கு வந்தபோது சர்ச்சைக்குரிய மைதானத்தில் மேடை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோவில் கமிட்டியினர் மாவட்ட கலெக்டரின் உத்தரவை மேற்கோள் காட்டியதன் அடிப்படையில், வருவாய்த்துறையினர் மேடை அமைக்க அனுமதி மறுத்தனர். இதனால் கோவிலுக்கு செல்லும் பாதையும் வருவாய் துறையினரால் அடைக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் நடத்திய போராட்டத்தின் விளைவாக, தடுப்புகள் அகற்றப்பட்டு கோவில் பூஜைகள் நடைபெற துவங்கியது. இங்கு நடக்கும் சிவராத்திரி திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 10,000 கற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பதுடன், கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் இணைந்து விழா நடத்துவார்கள்.
இந்நிலையில் தொடர்ச்சியாக எருமாடு பகுதியை சேர்ந்த ஒரு சில மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாற்று மதத்தை சேர்ந்தவர்களை இணைத்து, கோவில் முன்பாக உள்ள மைதானத்தில் சமத்துவ பொங்கல் நடத்த அனுமதி கேட்ட நிலையில், அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த கோவிலை இந்து சமய அறநிலை துறைக்கு வழங்க வேண்டும் என சமத்துவ பொங்கல் விழா நடத்த முடிவு செய்த குழுவினர், ஆளுங்கட்சி நிர்வாகிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வரும் 27 ஆம் தேதி, கோவிலில் இந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்படும் தக்கார் பொறுப்பேற்க உள்ளதாகவும், கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள இப்பகுதி பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கோவில் கமிட்டி நிர்வாகி சுந்தரம் கூறுகையில், கடந்த 1982 ஆம் ஆண்டு முதல், கோவில் நிலம் குறித்த பிரச்சனை தொடரும் நிலையில், அது குறித்து முழுமையான ஆய்வு செய்ய முன்வராத அதிகாரிகள், தற்போது இந்துக்களுக்கு எதிரான நபர்கள் கூறும் தகவல்களை முன் வைத்து, அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வழி நடத்தும் இந்த கோவிலை அறநிலையத்துறைக்கு எடுப்பது கண்டிக்கக் கூடியது. ஒருவேளை பூஜைக்கு கூட வழியில்லாத கோவில்களை இந்தத் துறை எடுத்து புனரமைத்து நடத்த வேண்டும். அதேபோல் பிற மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்களையும் அரசு ஏற்று நடத்தினால் வரவேற்கலாம். இந்நிலையில் எருமாடு சிவன் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை எடுக்கும் முன்பாக, கோவிலை ஒட்டி கோவிலுக்கு சொந்தமான இடங்களையும் மீட்டு, குளம் மற்றும் குளத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமைப்படுத்தி அதனை பொதுமக்களுக்கு தெரிவித்து பின்னர், எடுத்து நடத்த முன் வந்தால் சிறப்பாக இருக்கும். மாறாக ஒற்றுமையாக செயல்படும் மக்களை சிதைக்க வேண்டும் எனும் நோக்கில், சிறுபான்மை மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் எனும் நினைப்பில் அரசு செயல்படும் நிலையில் தொடர் போராட்டம், மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.