பதிவு செய்த நாள்
24
மார்
2025
05:03
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தேரோட்டம் நடக்கிறது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என சிறப்பு பெற்றதும், காசியில் வாசி அவிநாசி என போற்றப்படும் கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று இரவு திருமுருகநாதர் வருகை, 2ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சி, 3ம் தேதி அதிகார நந்தி, கிளி, பூத, அன்ன வாகன காட்சி, 4ம் தேதி கைலாச வாகனம், புஷ்ப விமான காட்சி நடைபெறும்.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளிக்கும் வைபபவம், 5ம் தேதியும், கற்பகவிருட்சம் திருக்கல்யாண உற்சவம் யானை வாகன காட்சிகள், 6ம் தேதியும் நடைபெறுகிறது. 7ம் தேதி அதிகாலை பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 8, 9ம் தேதி காலை, 9:00 மணிக்கு பெரிய தேரோட்டம், 10ம் தேதி காலை, 8:00 மணிக்கு அம்மன் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் தேரோட்டமும், மாலை வண்டித்தாரை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும், 11ம் தேதி பரிவேட்டை, 12ம் தேதி தெப்பத்தேர், 13ம் தேதி நடராஜ பெருமான் தரிசனம், மாலை கொடியிறக்கம் நடைபெறுகிறது. தேர்த்திருவிழா நிறைவாக, மே 14ம் தேதி மஞ்சள் நீர் விழா, இரவு மயில் வாகனத்தில், ஸ்ரீசுப்ரமணியர் எழுந்தருளி திருவீதியுலா காட்சி நடைபெறுகிறது. சித்திரை தேர்த்திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார், ஆறுமுகம், கவிதாமணிஆகியோர் செய்து வருகின்றனர்.