திண்டுக்கல்; திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் நந்தவனத்தில் நட 100 துளசி நாற்றுகள் வந்தன.
தாடிகொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் நந்தவனத்தில் திருப்பதி திருமலையிலிருந்து துளசி நாற்றுகளை வாங்கி நட வேண்டும் என பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று தாடிகொம்பு கோயில் அறங்காவலர் குழுவினர் துளசி நாற்றுகளை வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானத்திடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி திருப்பதி திருமலை தேவஸ்தான தோட்டக்கலைத்துறை சார்பில் முதற்கட்டமாக 100 துளசி நாற்றுகள் இன்று தாடிகொம்பு கோயிலுக்கு அனுப்பப்பட்டன. அந்த துளசி நாற்றுகள் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் தலைமையில் நந்தவனத்தில் நடப்பட்டன. அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கார்த்திக், அர்ச்சகர்கள் ராமமூர்த்தி, ரமேஷ், பதரி, மணியம் அரவிந்தன் உள்ளிட்டோர் நாற்றுகளை நட்டனர். மேலும் 400 துளசி நாற்றுகள் திருப்பதியிலிருந்து விரைவில் வர உள்ளதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.