பதிவு செய்த நாள்
03
ஏப்
2025
11:04
மயிலாடுதுறை; சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் பகவானும், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு இணையான செல்வமுத்துக் குமார சுவாமியும், சித்த மருத்துவத்தில் தலைவரான தன்வந்திரி சித்தரும் இங்கு தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலுக்கு வந்து சுவாமி அம்பாளை தரிசிப் போருக்கு 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் பிரம்மோற்சவமான பங்குனி உத்திரப் பெறுவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. சுவாமி அம்பாள் உற்சவர்கள் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். இரவு 9 மணி முதல் 11 மணிக்குள் தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் எட்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடி மரங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் கொடி மரத்தில் பூஜை செய்யப்பட்ட அஷ்ட கொடிகள் ஏற்றப்பட்டன. அதனை அடுத்து சுவாமி வீதி உலாவும், நரி ஓட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பூஜைகளை கோவில் சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். கொடியேற்று நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நமச்சிவாய கோஷமிட்டு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 6ம் தேதி சகோபரம், 8, 9ம் தேதிகளில் திருத்தேர், 11ம் தேதி தீர்த்தவாரி 13 ஆம் தேதி காட்சி திருநாள் 14ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.