பதிவு செய்த நாள்
04
ஏப்
2025
01:04
முருகனின் ஏழாம் படைவீடாக பக்தர்களால் கருதப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் சிறப்புகளை, கச்சியப்ப முனிவர் எழுதிய, பேரூர் புராணத்தில், மருதவரை படலம், அபயப் படலத்தில் சிறப்பித்து கூறியுள்ளார். மருதமலை திருத்தலத்தை கொங்குச் சோழர்கள் முதல் முதலில் நிர்மாணித்தனர். அதனைத் தொடர்ந்து, விஜயநகர பேரரசர்கள் மற்றும் கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தலம் உருவானது. மருதமலை தலபுராணம், பச்சையப்பன் முனிவரால் தொகுத்தளிக்கப்பட்டது.
ஈசனிடம், 1,008 அண்டங்களையும், 108 யுகங்களையும் ஆளும் பெரும் வரத்தை பெற்று சூரபத்மன், தன் தம்பிகளான சிங்கமுகன், தாரகன் ஆகியோரின் துணையோடு, தேவர்களுக்கு சொல்லில் அடங்கா கொடுமைகளை செய்தான். சூர பத்மனின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான், தேவர்களிடம் சூரபத்மன் மற்றும் அவன் தம்பிகளை வதம் செய்ய, குமரன் தோன்றும் வரை, ஆதிபுரி எனப்படும் பேரூரில் தங்கியிருக்குமாறு ஆணையிட்டார். அங்கே மருதமலை உள்ளது எனவும் சிவபெருமான் கூறினார். தேவர்களும், மருதமலைக்கு வந்தனர். இந்நிலையில், சிவபெருமானின் ஐந்து முகத்திலிருந்து, அதோர் முகமாக, தீப்பிழம்பாக, திருமுகங்கள் ஆறாக, முருகப்பெருமான் தோன்றினார். இந்த நற்செய்தியை நாரதர், தேவர்களிடம் சொன்னார். இதனால் மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், முருகப்பெருமானை வேண்டி கல்பகோடி ஆண்டுகள் தவம் மேற்கொண்டார்கள். இதையறிந்த மகாவிஷ்ணுவும், அன்னை உமா தேவியின் திருப்பாத சிலம்பு முத்துக்களில் இருந்து உதித்த நவவீரர்களும், மருதமலைக்கு விரைந்தனர். அவர்களும், இந்த எண்ணல்களில் இருந்து விடுபட தவம் புரிந்தனர். நாரதர், முருகப்பெருமான் வழிபாட்டை பற்றி மகாவிஷ்ணுவிற்கு எடுத்துரைக்க, மகாவிஷ்ணு அவ்வழிபாட்டை துவங்கினார். கார்காலம், கூதிர்காலம், இளவேனில், முதுவேனில், முன்பனிக்காலம் என ஐந்து காலங்களாக பிரித்து, நாரதர் உரைத்த பூஜை உபகரணங்களை கொண்டு பூஜித்தார். இதில் மனம் மகிழ்ந்த முருகப்பெருமான், மருத வேல் படையாக, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், நவவீரர்களுக்கும், மகாவிஷ்ணு முன்பு, முருகப்பெருமான் காட்சியளித்தார். அப்போது, இனியாமுண்டு அஞ்சேல் என, திருவாய் மலர்ந்தருளினார். அப்பெருமை மிக்க, மருதவரை எனும் மருதமலையில் முருகப்பெருமான் வணங்குவோருக்கும், வருவோர்க்கும், தன்னை வழிபடுவோர்க்கும் பல வரங்கள் வாரி வழங்கும் வள்ளலாக, மருதாச்சலமூர்த்தி என்ற நாமத்தில் மருதமலையில் அருள்பாளிக்கிறார். இப்பெருமை மிக்க மருதமலை வனப்பகுதியில், மனிதர்களின் உடல் பிணி மற்றும் மனப்பிணியை போக்கும், ஏராளமான மூலிகை மரங்களும் நிறைந்துள்ளதால், இங்கு வருவோருக்கு, உடல் மற்றும் மனக்கவலை நீங்குகிறது.
மருதமலை தலத்தின் பெருமைகளும் சிறப்புகளும்;
பாம்பாட்டி சித்தர் வடித்த முருகன் சிலை; பதினெண் சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர், மருதமலையில் முருகனின் அருளை பெற்றார். மருதமலையில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மூவரும், லிங்க வடிவில் உள்ளனர். முருகன் அருளை பெற்ற பின், பாம்பாட்டி சித்தர் வடித்த முருகர் சிலையே, தற்போது நாம் அனைவரும் தரிசித்து வரும், மூலஸ்தானத்தில் உள்ளது.
சிலையாய் மாறிய திருடர்கள்; மருதமலை அடிவாரம், நுழைவு வாயிலில் நின்று, வடக்கு திசை நோக்கி பார்த்தால், மலைச்சாரலில், மூன்று கற்கள் மாறுபட்ட நிறத்தோடு இருப்பதை கானலாம். இம்மூன்று கற்களும், சிலையாய் மாறிய திருடர்கள் என்பர். முருகனடியார்கள், கோவில் திருப்பணி நடந்த போது, பொன்னையும், பொருளையும் உண்டியலில் போடுவதைக் கண்ட, மூன்று திருடர்கள், ஒரு நாள் இரவு, உண்டியலை உடைத்து, பொன்னையும், பொருளையும் திருடி, மலைச்சரிவு வழியாக சென்றனர். அப்போது, முருகப்பெருமான், குதிரை வீரனை போல சென்று, அவர்களைப் பிடித்து, நீவிர் கற்சிலைகளாக கடவீர் என சபித்ததால், அம்மூன்று திருடர்களும், கற்சிலைகளாக மாறி நிற்பதாக செவி வழி செய்தி கூறுகின்றது.
குதிரை குளம்படிகள்; படிக்கட்டு பாதையில், இடும்பன் சன்னதியை கடந்து மேலே செல்லும் போது வரும் முதல் மண்டபத்தில், குதிரை குளம்பு எனும் சுவடு உள்ளது. முருகப்பெருமான், சூரர்களை வெற்றி கொள்ள புறப்படும் போது அல்லது திரும்பி வரும் போது குதிரை குளம்புகள் பதிந்த இடமென கருதப்படுகிறது. உண்டியல் பொருட்களை திருடர்கள் திருடி சென்ற போது, அவர்களை முருகப்பெருமான் தேடி செல்லும் போது ஏற்பட்ட குதிரையின் குளம்படியாகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
சாண்டோ சின்னப்பா தேவரின் திருப்பணி; தேவர் பிலிம்ஸ் உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவர். இவர் மாபெரும் முருக பக்தர். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, கடந்த 1960ம் ஆண்டு வரை, நடந்ததுதான் செல்ல வேண்டும். அப்போது, சரியான பாதை, மின்சாரம் குடிநீர் வசதி கிடையாது. இதனால், மாலை நேரத்துக்கு பின், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இதற்கு தீர்வு காண, ஆட்சியாளர்களிடம் போராடியும், தனது சொந்த பணத்தை செலவழித்தும், வடவள்ளியில் இருந்து மருதமலை வரை, மின் விளக்குகள் அமைத்தார். அதை, எம்.ஜி.ஆர்., மூலம் துவங்கி வைத்தார். அதோடு, படிக்கட்டு பாதைகளையும் சீரமைத்தார். கோவிலில் ஏராளாமான கட்டுமானப்பணிகள், சுவாமிக்கு தேவையான ஆபரணங்களையும் சாண்டோ சின்னப்பா தேவர் வழங்கினார்.
மருதமலை கோவிலில் எம்.ஜி.ஆர்., செங்கோல்; கோவை, பெரிய கடை வீதியில், கடந்த 1980ம் ஆண்டு, சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் சங்க கட்டடமான, தங்க மாளிகை எனும் கட்டடத்தை, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., திறந்து வைத்தார். அத்திறப்பு விழாவில், சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், முதல்வர் எம்.ஜி.ஆர்.,க்கு செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை, சாண்டோ சின்னப்பா தேவரின் நினைவாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, எம்.ஜி.ஆர்., வழங்கினார். இந்த செங்கோல், தற்போதும், மருதமலை மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சோமாஸ்கந்தர் திருக்கோலம்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் தனிக்கோவிலாக விளங்குகிறது. இருப்பினும், இத்திருத்தலத்தில், மூலவர் சுப்பிரமணிய சுவாமி சன்னதியின் வலப்புறம் பட்டீஸ்வரர் சன்னதியும், இடப்புறம் மரகதாம்பிகை சன்னதியும் உள்ளதால், சோமாஸ்கந்தர் திருக்கோலம் கொண்டுள்ளது.