பதிவு செய்த நாள்
05
ஏப்
2025
10:04
மதுரை; ‘தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த விதித்த தடையை ரத்து செய்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தென்காசி நம்பிராஜன் தாக்கல் செய்த மனு: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்.7-ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. கோயில் ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் கோயிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும். கோயில் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். கோயில் புனரமைப்பு பணிக்கு அரசு வழங்கிய நிதியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, கும்பாபிஷேகத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். தடையை நீக்கக்கோரி அறநிலையத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை நேற்று நீதிபதிகள் விசாரித்தனர். அரசு தரப்பில், ராஜகோபுரம் உள்பட கோயிலின் புனரமைப்புப் பணிகள் முடிந்துள்ளன. கணபதி ஹோமம் நடந்து முடிந்துள்ள நிலையில் கும்பாபிஷேகத்தை நிறுத்துவது சரியல்ல என கூறப்பட்டது. இதையேற்று கும்பாபிஷேகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.