பதிவு செய்த நாள்
08
ஏப்
2025
10:04
அபுதாபி; ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் உள்ள பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ராமநவமி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில் பிரமாண்டமாக ஹிந்து கோவில் கடந்தாண்டு திறக்கப்பட்டது. டில்லியில் உள்ள பாப்ஸ் எனப்படும் போச்சசன்வாசி ஸ்ரீ அக் ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா அமைப்பு சார்பில் கட்டப்பட்ட இந்த கோவில், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஹிந்துக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இங்கு, ராமரின் பிறந்த தினமான ராமநவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி நேற்று விமரிசையுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பல மணி நேரம் காத்திருந்து ராமர் மற்றும் சீதையை தரிசித்தனர். ராமநவமியை ஒட்டி கோவில் வளாகத்தில் கட்டுக்கடங்காமல் திரண்ட பக்தர்களுக்கு தண்ணீர், சிற்றுண்டி ஆகியவை வழங்கப்பட்டன. நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தை போற்றும் வகையில் சிறப்பு நடன நிகழ்ச்சிகளும் நடந்தன. இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆன்மிக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சுவாமி நாராயண் கோவிலில் நடந்த ராமநவமி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வந்திருந்த பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டன’ என, தெரிவிக்கப்பட்டது.