பதிவு செய்த நாள்
09
ஏப்
2025
01:04
சத்தியமங்கலம்; சத்தியமங்கலம் அருகே பண்ணாரியம்மன் கோவிலில், லட்சக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா கடந்த மார்ச், 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதை தொடர்ந்து பண்ணாரி அம்மன் உற்சவர், கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில், சப்பரத்தில் வீதியுலாவாக கொண்டு செல்லப்பட்டது. அதேசமயம் கோவிலில் நாள்தோறும் சிறப்பு பூஜை மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான குண்டம் விழா நிகழ்வு நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியது.
அதிகாலை பூஜை; பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று சருகு மாரியம்மனுக்கு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர், குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது. குண்டத்தை சுற்றி கற்பூரம் ஏற்றி பூஜை செய்து மலர் துாவப்பட்டது.
முதலில் இறங்கிய பூசாரி; சரியாக அதிகாலை, 3:57 மணிக்கு கோவில் பூசாரி ராஜசேகர் குண்டத்தில் முதலில் இறங்கினார். இதை தொடர்ந்து இசைக்கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் தீ மிதிக்க தொடங்கினர். தமிழக உள்துறை செயலர் அமுதா உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கல்லுாரி மாணவ, மாணவியர், திருநங்கைகள், பெண்கள், போலீசார், வனத்துறையினர், மாற்றுத்திறனாளிகள் தீ மிதித்தனர். குண்டம் இறங்கிய பக்தர்கள் கோவிலுக்குள் நேரடியாக சென்று அம்மனை தரிசித்தனர்.
14 மணி நேரம் நடந்த விழா; ஈரோடு எஸ்.பி., சுஜாதா தலைமையில், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்ட போலீசார், 2,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட அண்டை மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா மாநில பக்தர்களும் விழாவில் பங்கேற்றனர். விழாவையொட்டி தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 150க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதிகாலை தொடங்கிய தீ மிதி விழா, நேற்று மாலை, 6:00 மணிக்கு முடிந்தது. மொத்தம், 14 மணி நேரம் நடந்த குண்டம் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்ததாக, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.