சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்துள்ள பூட்டை மாரியம்மன் கோவிலுக்கு 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யும் பணி தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா மூன்று நாட்கள் நடந்து வருகிறது. சங்கராபுரம் சுற்றி உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 10,000த்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இக்கோவில் தேர் சிதிலமடைந்ததால் புதிய தேர் செய்ய சங்கராபுரம் எம்.எல்.ஏ.வும், ஊரக தொழில்துறை அமைச்சருமான மோகன், தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர், புதிய தேர் செய்ய 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதையொட்டி பூட்டை ஊராட்சி தலைவர் கந்தசாமி ஏற்பாட்டின்பேரில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிற்பி குமார் தலைமையில் புதிய தேர் செய்யும் பணி தொடங்கியது.6 சிற்பிகள் இரவு பகலாக தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று நிலை கொண்ட தேரின் முதல் நிலை பணிகள் தொடங்கி உள்ளது. சித்திரை மாதத்திற்குள் தேர் செய்து முடிக்கப்படும் என தெரிவித்தனர்.