திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனும் சுவாமியும் காலை, இரவு என இருவேளையும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இன்று 8ம் நாள் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்தில் அம்மனும் சுவாமியும் அலங்கார கோலத்தில் எழுந்தருளினர். அம்மனுக்கும், சுவாமிக்கும் பட்டு வேட்டி, பட்டு சேலை அணிவிக்கப்பட்டது. காலை 11:30 மணிக்கு அம்மன் சார்பாக உமாமகேஷ்வர பட்டரும், சுவாமி சார்பாக ரமேஷ் பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். தொடர்ந்து வேத மந்திரம் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருமணமான பெண்கள் திருமாங்கல்ய கயிறு மாற்றி கொண்டனர். நாளை (10ம் தேதி ) காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.