கோட்டையூர் காளியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2025 11:04
செந்துறை, நத்தம் செந்துறை அருகே கோட்டையூரில் காளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மார்ச் 30- அழகர்கோவில் நூபுர கங்கை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஏப்ரல் 6-ம் தேதி இரவு கோவில் வீட்டிற்கு அம்மன் சிலை கொண்டு வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. திருவிழாவில் நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் முளைப்பாரி, அக்னிசட்டி, மாவிளக்கு, பறவை காவடி, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். பின்னர் மாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோட்டையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்டோர் கை குழந்தைகளுடனும், அலகுவேல் குத்தியும், வரிசையாக பூக்குழி இறங்கினர். தொடர்ந்து இரவு அம்மன் வானவேடிக்கைகளுடன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோட்டையூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.