பதிவு செய்த நாள்
11
ஏப்
2025
10:04
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர பெரு விழாவை ஏராளமான பொதுமக்கள் பால்குடம் எடுத்தும் வேல் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற ஸ்ரீவழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர பெரு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த1ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று பங்குனி உத்திர பெருவிழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. வழிவிடு முருகன் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நொச்சி வயல் பிரம்ம முனீஸ்வரர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள், சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பால்குடம், வேல் காவடி, மயில் காவடி, பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நொச்சிவயல் ஊரணி பகுதியில் இருந்து அக்ரகாரம் அரண்மனை வண்டிக்கார தெரு வழியாக ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலை வந்து அடைந்த பக்தர்கள் வழிவிடு முருகனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால் பன்னீர் இளநீர் மஞ்சள் திரவிய பொடிகள் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்றது. தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோவில் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.