பதிவு செய்த நாள்
11
ஏப்
2025
03:04
சபரிமலை; சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா ஆராட்டுடன் நிறைவு பெற்றது. ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை நாளை மறுநாள் சபரிமலையில் தொடங்குகிறது.
பங்குனி உத்திர திருவிழா கடந்த இரண்டாம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் உற்சவபலி, ஸ்ரீ பூதபலி போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்று வந்தது. 9-ம் நாள் விழாவில் இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளினார். நள்ளிரவில் சுவாமி சன்னிதானம் திரும்பினார். இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் சுவாமியை ஸ்ரீகோயிலுக்குள் ஆவாகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பூஜைகள் நடைபெற்றது 8:00 மணிக்கு ஆராட்டுப்பவனி பம்பைக்கு புறப்பட்டது. 11.45 மணிக்கு பம்பை நதியில் பாராட்டு . ஆராட்டு விக்ரகத்துக்கு குளக்கரையில் பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்த பின்னர் விக்கிரகத்துடன் பூஜாரிகள் தண்ணீரில் மூழ்கி எழுந்தனர் அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழக்கினர். மாலை 3:00 மணிக்கு ஆராட்டுபவனி சன்னிதானத்திற்கு புறப்பட்டது. இரவு 8:30 மணிக்கு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. நாளை முதல் சித்திரை விசு கால பூஜைகள் தொடங்குகிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 70 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் மறுநாள் முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. 1,2,4,6,8 கிராம் எடைகளில் 916ஹால்மார்க் முத்திரையுடன் இந்த டாலர்கள் கிடைக்கும். ஆன்லைன் மூலமும் தேவசம்போர்டு அலுவலகத்தில் பணம் செலுத்தியும் இந்த டாலர்களை பெற முடியும்.