முருகன் கோவிலில் வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.32 ஆயிரத்திற்கு ஏலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2025 04:04
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே முருகன் கோவிலில் வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழம் 32 ஆயிரத்து 400 ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது .கருவறையில் வேல் மட்டுமே உள்ளே கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 9 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். விழாவை முன்னிட்டு நடத்தப்படும் ஒன்பது நாட்கள் உற்சவ காலங்களில் தினமும் வேலில் செருகப்படும் எலுமிச்சை பழங்கள் இடும்பன் பூஜையில் வைத்து பங்குனி உத்திரத்திர விழா நாளன்று நள்ளிரவு ஏலம் விடப்படும். அதன்படி நேற்று இரவு 11:00 மணிக்கு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள், குடும்ப பிரச்னை உள்ளவர்கள், வியாபாரத்தில் கஷ்டம் அடைந்தவர்கள் என பலர் பங்கேற்று ஏலம் எடுத்தனர். முதல் நாள் எலுமிச்சை பழம் 20 ஆயிரம் ரூபாய்க்கும் இரண்டாம் நாள் பணம் 3,600 ரூபாய் என 9 எலுமிச்சம் பழங்களும் 32 ஆயிரத்து 400 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தில் சென்னை, திருச்சி, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலுார், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், மழையின் காரணமாக இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 2 லட்சம் ரூபாய் குறைவாக ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.