பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
10:04
திருத்தணி; திருத்தணி, காந்தி நகர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த மாதம் 27ம் தேதி துவங்கி, நேற்று நண்பகல் 11:00 மணிக்கு தருமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவடைந்தது.
இந்த விழாவில், திருத்தணி, தரணிவராகபுரம், முருக்கம்பட்டு, காசிநாதபுரம், வேலஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, நேற்று முன்தினம் இரவு அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என, பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, உத்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருத்தணி நகரம் முழுதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை தர்மர் பட்டாபிஷேகத்துடன், இந்தாண்டிற்கான தீமிதி விழா நிறைவடைந்தது. நேற்று கொடி இறக்கமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.