பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
04:04
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், வேதவதி ஆற்றில் அருகில், 1466ல் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இதை ‘தெற்கு காசி’ என்றும் அழைக்கின்றனர். புராணங்கள்படி, இப்பகுதியில் பெலவாடி ஹேமா ரெட்டி மல்லம்மா என்ற பக்தை வசித்து வந்தார். ஆண்டு தோறும், வாரணாசிக்கு பாதயாத்திரையாக சென்று வந்தார். வயதான பின், அவரால் நடக்க முடியவில்லை.
மகிழ்ச்சி; சிவனை தரிசிக்க முடியவில்லையே என்று மல்லம்மா வருந்தினார். தன் பக்தை வேதனை அடைவதை கவனித்த சிவன், மல்லம்மாவின் கனவில் தோன்றினார். ‘உனது பக்தியால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். இனி என்னை காண, வாரணாசிக்கு வர வேண்டாம். உனக்காக ஹிரியூரிலேயே உருளை கல் வடிவில் உனக்கு அருள்பாலிப்பேன்’ என்றார். அன்று முதல் உருளை கல்லை சிவனாக பாவித்து வழிபட துவங்கினார். இந்திய தொல்லியல் துறையின் கீழ் வரும் இக்கோவில், திராவிட கட்டட கலையில் கட்டப்பட்டு உள்ளது. மேற்கு திசையை நோக்கி கட்டப்பட்டு உள்ள இக்கோவிலின் ராஜகோபுரம், தெற்கு திசை நோக்கி உள்ளது. சித்ரதுர்கா பாலேகாரரான இரண்டாம் மேடகரி நாயகா, இந்த கோபுரத்தை கட்டினார். கோவிலில் கருவறை, நவரங்கம், மண்டபம் அமைந்து உள்ளது.
ஓவியங்கள்; முகப்பு மண்டபத்தின் கூரையில், சிவபுராணம், ராமாயணத்தின் காட்சிகளை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. நவரங்கத்திற்குள் நந்தியின் மீது அமர்ந்திருக்கும் சந்திர மவுலீஸ்வரர், உமா மகேஸ்வரரின் உலோக சிலைகளை காணலாம். கருவறையில் லிங்க வடிவில் உள்ள ‘திரு மல்லேஸ்வரர்’ மூலவராக அருள்பாலிக்கிறார். வெளிப்புற பிரகாரத்தில் நந்தி, பலிபீடம், தீப கொடிமரம் அமைந்து உள்ளன. ஆண்டுதோறும் பிப்ரவரியில் திரு மல்லேஸ்வரா தேர் திருவிழா நடக்கிறது. இதை பார்க்க அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். வாழைப்பழத்தில் தங்கள் வேண்டுதலை எழுதி, தேரின் மீது வீசினால் நினைத்த காரியம் நடக்கும் என நம்புகின்றனர். தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். – நமது நிருபர் –