பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
05:04
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில் தான் இனோலி சோமநாதேஸ்வரர் கோவில். இது ஒரு சிவன் கோவிலாகும். இக்கோவிலுக்கு பல வரலாற்று சிறப்புகள் உள்ளன. மேலும், சக்தி வாய்ந்த கோவிலாக நம்பப்படுகிறது. இந்த கோவிலின் மூலவராக ஸ்ரீ சோமநாதேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவி சுயம்வர பார்வதி, பாலமுரி கணபதியும் உள்ளனர். கோவில் பார்ப்பதற்கு அழகாகவும், ரம்யமாகவும் காட்சி அளிக்கிறது. சோமநாதேஸ்வரையும், அவர் அமர்ந்துள்ள இடத்தையும் பார்க்க இரண்டு கண்கள் போதாது. அதுமட்டுமின்றி மலை மீது அமைந்துள்ள சிவன் கோவில் என்ற சிறப்பும் உள்ளது.
பெரிய தோட்டம்; நேத்ராவதி ஆற்றால் சூழப்பட்டிருக்கும் மலை மீது கோவில் உள்ளது. கோவிலின் பின்புறம் பெரிய அளவிலான தோட்டம் உள்ளது. இங்கு நிறைய மரங்கள் காணப்படுகின்றன. பார்ப்பதற்கு மனதிற்கு நிம்மதியான ஒரு காட்சியை தரும் வகையில் உள்ளது. இந்த கோவில், எந்த நுாற்றாண்டில் கட்டப்பட்டது என்ற தெளிவான புள்ளி விபரங்கள் இல்லை. ஏனெனில், இக்கோவில் ஐரோப்பிய படையெடுப்பின் போது பாதி அளவு அழிக்கப்பட்டு உள்ளது. கோவிலின் அமைப்பு ஹொய்சாளா கட்டட கலையில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். கடந்த 2000ம் ஆண்டில், அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக 2017ம் ஆண்டு கோவில் முழுதுமாக கட்டப்பட்டது. கோவிலுக்கு அருகில் பல பழைய சிற்பங்களும் காணப்படுகின்றன.
தடை நீங்கும்; இத்தனை வரலாற்று சிறப்புமிக்க கோவிலில், திருமணம் நடக்காமல் இருப்போர், சுயம்வர பார்வதியிடம் வேண்டினால் திருமண தடை நீங்கும்; பாலமுரி கணபதியிடம் வேண்டினால் பிரச்னைகள் தீரும் என பக்தர்கள் கருதுகின்றனர். சோமநாதேஸ்வரரின் திருவுருவ சிலை 2,000 ஆண்டு பழமையானதாக கூறப்படுகிறது. மஹா சிவராத்திரி அன்று மூன்று நாட்கள் விழா கொண்டாடப்படுறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளின் போது சிறப்பு பூஜைகள் நடக்கும். இக்கோவிலில், காலை 7:00 மணி, மதியம் 12:35 மணி, இரவு 7:00 மணி என தினமும் மூன்று வேளை பூஜைகள் நடத்தப்படும். கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 5:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். இந்த பகுதியைச் சுற்றி உல்லாலா, அம்மெம்பலா, இரா, இனோலி, கொனாஜே ஆகிய ஐந்து சோமநாதேஸ்வரர் கோவில்கள் உள்ளன. – நமது நிருபர் –