பதிவு செய்த நாள்
21
ஏப்
2025
10:04
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், மைய சன்னிதியில், வடக்கு முகம் நோக்கி, வட்டப்பாறையம்மன் எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை மாதம், வட்டப்பாறையம்மன் உத்சவம், கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, அம்மன் சன்னிதி முன், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, சன்னிதி முன் உள்ள, கொடிமரத்திற்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள் மற்றும் கலசநீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. பின், கொடிமரம் அருகே, பிரமாண்ட பவழக்கால் விமானத்தில் வட்டப்பாறையம்மன் எழுந்தருளினார்; சிவப்பு அரளி பூ மாலை அணிந்திருந்தார். வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘ஓம் சக்தி பராசக்தி’ என விண்ணதிர முழங்கினர். அம்மன், நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.