பதிவு செய்த நாள்
21
ஏப்
2025
10:04
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள எல்லையில் உள்ள ஆனைகட்டியில் படப்பிடிப்பில் உள்ள ரஜினிக்கு ஹிந்து முன்னணியினர் அழைப்பு விடுத்தனர். அதற்கான அழைப்பிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம், 22ம் தேதி ‘குன்றம் காக்க, கோவிலை காக்க’ என்ற தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடக்கிறது. இம்மாநாட்டில் நடிகர் ரஜினியை கலந்து கொள்ள வைக்கும் தீவிரத்தில் ஹிந்து முன்னணி களம் இறங்கி உள்ளது. இதற்காக, ரஜினியை சந்தித்து, அவருக்கு மாநாட்டு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். தற்போது, கோவை அருகே கேரளாவுக்கு உட்பட்ட ஆனைகட்டியில் சோலையூர் பகுதியில் நடக்கும் படப்பிடிப்பில் உள்ளார் நடிகர் ரஜினி. இதை அறிந்த ஹிந்து முன்னணியினர், கோவை வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்தி தலைமையில், சோலையூர் பகுதிக்குச் சென்று நடிகர் ரஜினியை சந்தித்தனர். பின், மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து, அழைப்பிதழ் வழங்கினர். கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி செய்தி தொடர்பாளர் கார்த்தி கூறுகையில், ‘‘தொடர் முயற்சிகளுக்குப் பின், படபிடிப்புக்காக சோலையூர் பகுதிக்கு வந்திருக்கும் நடிகர் ரஜினியை சந்தித்துப் பேசி, முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக விளக்கம் அளித்தோம். மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என கூறியதும், கட்டாயம் வருகிறேன் என தெரிவித்தார். அவரும் முருக பக்தர் தான் என்பதால், கட்டாயம் வருவார் என நம்புகிறோம்,’’ என்றார்.