பதிவு செய்த நாள்
21
ஏப்
2025
10:04
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா, கடம்பர்கோவில் கிராமத்தில் ஆவுடைநாயகி சமேத கடம்பநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், பங்குனி பிரம்மோத்சவம், சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளாக பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் உள்ள முகப்பு மண்டபம், மூலவர் சன்னிதி, கொடிமரம், வாகன மண்டபம் ஆகியவை சேதமடைந்து இருந்தது. எனவே, கோவிலை புதுப்பிக்க பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, முதல் கட்டமாக உபயதாரர் நிதியின் கீழ், 12.7 லட்சம் ரூபாய் செலவில், புதிய கொடிமரம் அமைக்கும் பணி, இரு மாதத்திற்கு முன் துவக்கப்பட்டது. தற்போது, 40 அடி உயரமுள்ள கொடிமரம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள, கோவில் கும்பாபிஷேகத்தின் போது, கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.