பதிவு செய்த நாள்
21
ஏப்
2025
11:04
பள்ளிப்பட்டு; பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜபேட்டையில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி துவங்கிய திருவிழாவில், திரவுபதியம்மன் திருக்கல்யாணம், அர்ச்சுனன் தபசு, சக்தி கரகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்து வந்தன. விழாவின் 18ம் நாளான நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான களிமண் சிலை அருகே, தெருக்கூத்து கலைஞர்கள், பீமசேனன், துரியோதனன் வேடம் அணிந்து, 18ம் போர்க்கள நிகழ்வை நடத்தினர். இதில், துரியோதனனை பீமசேனன் வெற்றி கொண்டார். இதையடுத்து, திரவுபதியம்மன் தனது சபதத்தை நிறைவேற்றி, கூந்தலை முடிந்தார். இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட திரளான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.