பதிவு செய்த நாள்
21
ஏப்
2025
03:04
கோத்தகிரி; கோத்தகிரி டானிங்டன் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோத்தகிரி டானிங்டன் பகுதியில், ஆஞ்சநேயருக்கு புதிய கோவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் விழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், 19ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, டானிங்டன் மகாசக்தி விநாயகர் கோவிலில் இருந்து, புண்ணிய தீர்த்தம், முளைப்பாரியுடன், ஆஞ்சநேயருக்கு சீதனம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகளை அடுத்து, தீபாராதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நிகழ்ச்சியிடம் பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் கருடன் வானில் வட்டமிட காலை, 8:55 மணிக்கு நடந்தது. மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர் பராசரரியா சுவாமிகள் தலைமையில், திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார், சுதர்சன பட்டாச்சாரியார் ஆகியோர் பங்கேற்று, கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்புஅபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.