யோக முனீஸ்வரருக்கு பூட்டு போட்டு வேண்டுதல் வைக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2025 04:04
செஞ்சி; இறைவனிடம் வேண்டுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை கடைபிடிக்கின்றனர். சிலர் காணிக்கை செலுத்தி வேண்டுதல் வைக்கின்றனர். சிலர் வேண்டுதல் நிறைவேறியதும் காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்கள் தங்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பல வகையில் கோரிக்கை வைக்கின்றனர். இதை போல் செஞ்சியில் உள்ள யோக முனீஸ்வரரிடம் பக்தர்கள் பூட்டு போட்டு தங்கள் கோரிக்கைகளை வைக்கின்றர். இதே போல் செஞ்சியில், சங்கராபரணி ஆற்று பாலத்தை அடுத்து சேத்துப்பட்டு ரோட்டின் துவக்கத்தில் உள்ள யோகமுனீஸ்வரிடம் பக்தர்கள் பூட்டு போட்டு கோரிக்கை வைக்கின்றனர். உறவினர், தொழில் எதிரிகள் செய்வினை செய்து இருப்பதாக சந்தேகம் எழும் பக்தர்கள், செஞ்சி யோக முனீஸ்வரர் கோவிலில் நட்டு வைத்துள்ள சூலத்தில் பூட்டு போட்டு தங்களுக்கு எந்த கெடுதலும் நேரக்கூடாது என வேண்டிக் கொள்கின்றனர். இதனால் செய்வினையால் ஏற்படும் தீமை தங்களை அண்டாது என நம்புகின்றனர். இது மட்டும் இன்றி, தனக்கு கட்டுப்படாத கணவனை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக பெண்களும், மனைவியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டி கணவர்களும் பூட்டு போட்டு வழிபாடு வைக்கின்றனர். தொழில் ரீதியாக கோர்ட்டு வழக்குகள், தொழில் போட்டியாளர்களை எதிராக செயல்பட விடாமல் தடுக்கவும் பூட்டு போட்டு வேண்டி கொள்கின்றனர். கோரிக்கை நிறைவேறியதும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.