பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
11:04
அவிநாசி; சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜ பெருமான் சிவகாமியம்பாள் உற்சவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ நடராஜ பெருமான் சிவகாமி அம்பாளுக்கு சித்திரை திருவோணம், ஆணி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வளர்பிறை சதுர்த்தி திதிகளில் மஹா அபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே நடைபெறும் மஹா அபிஷேகத்தில்,நேற்று சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடராஜப் பெருமான் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், தயிர், இளநீர்,மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 32 வகையான திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து,சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் சிவகாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்ச புராண கூட்டு வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.