பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
11:04
சென்னை; செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் அருகில் பெருங்கோழி என்ற கிராமத்தின் சிவன் கோவிலில் உள்ள பழமையான லகுலீசர் சிற்பத்தால், அக்கோவில், 1,100ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதை, தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்துஉள்ளனர். இக்கோவிலில் மூலவர் குமாரீஸ்வரர் என்ற பெயரால் வணங்கப்படுகிறார். இந்த கோவிலில் கல்வெட்டுகள் ஏதும் இல்லாததால், இது யாரால், எப்போது கட்டப்பட்டது என்ற வரலாறு தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அந்த கோவில் சுவர்கள், சிற்பங்களை, அப்பகுதியில் உள்ள வரலாற்று விரும்பிகள் சங்கத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்த, அச்சங்கத்தைச் சேர்ந்த ராதாவைத்தியநாதன் கூறியதாவது: இந்த கோவிலில், தலையில் மகுடம், காதுகளில் வளைந்த காதணி, மார்பின் குறுக்கே முப்புரி நுால் அணிந்து, கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் உள்ள லகுலீசர் சிற்பத்தைக் கண்டோம். இடது கையை தொடை மீது வைத்து, வலது கையில் மழு எனும் தடியை வைத்துள்ளார். இந்த சிற்பத்தில், பல்லவர் கால கலைப் பாணிக்கே உரிய மகுடம் உள்ளது. மற்ற சிற்ப அடையாளங்களும், பல்லவர் காலத்தை உறுதி செய்கின்றன. இதை வைத்து, இந்த சிற்பம் 8 – 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இந்த ஊரின் விளைச்சலில், 10ல் ஒரு பங்கை, பாஷ்ய விருத்தியாக, காஞ்சிபுரம் அருளாளப் பெருமாளுக்கு அளித்ததாகவும், மீதமுள்ள பங்கை மடத்தில் திருவமுது செய்யும் ஜீயர்களின் அமுது படியாக வழங்கப்பட்டதாகவும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கல்வெட்டில் குறிப்பு உள்ளது. சிவனின் 28வது அவதாரமாகக் கருதப்படுபவர்; பாசுபத சமயத்தை தோற்றுவித்தவர். இவர், 2ம் நுாற்றாண்டில், குஜராத் மாநிலம், காயாவரோகன் எனும் இடத்தில் பிறந்தவர் என்ற கருத்து உள்ளது. இதே கோவிலில், 15 – 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் மற்றும் பைரவர் சிலைகளும் உள்ளன. இந்த கோவிலில் உள்ள பழமையான லகுலீசர் சிற்பத்தால், இந்த கோவில், 1,100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதை அறிய முடிகிறது. அதுபோல், பழமையான கோவில்களை புதுப்பிக்கும்போது, அங்குள்ள சிலைகளை, அப்படியே வழிபடுவதுதான், நாம், நம் வரலாற்றுக்கும், முன்னோர்களுக்கும் செய்யும் மரியாதையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.