சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடக்கிறது. ஆனித் திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசன காலங்களில் ஆயிரங்கால் மண்டப முகப்பில், சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடக்கிறது. அந்த வகையில், சித்திரை மாத மகாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று காலை நடராஜருக்கு ஏககால லட்சார்ச்சனை நடந்தது. பின், மகா ருத்ர ஜபம் துவங்கி மதியம் முடிந்தது. தொடர்ந்து, மகாருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகாருத்ர பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பூ, விபூதி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.