பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
11:04
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், மகா சக்தி மாரியம்மன் கோவிலில், வள்ளி கும்மி அரங்கேற்றம் நடந்தது.
மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், இளம் பெண்கள், ஆண்கள், பெண்கள் ஆகியோர் வள்ளி கும்மியை கற்க விருப்பம் தெரிவித்தனர். இடுகம்பாளையம் ராஜா மகா சக்தி வள்ளி கும்மி குழு ஆசிரியர் முத்துசாமி, இவர்களுக்கு வள்ளி கும்மியை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். இதற்காக இக்கலையை நன்கு கற்ற அம்சவேணி, மகேஸ்வரி என்ற இரண்டு கலை ஆசிரியர்களை நியமித்து, இவர்களுக்கு வள்ளி கும்மி கலையை கற்றுக் கொடுத்தார். ஒரு மாதம் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பங்களா மேடு மகா சக்தி மாரியம்மன் கோவிலில், 15ம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வள்ளி கும்மியின் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் முத்துசாமி குழுவினர் பாட்டு பாட, அதற்கேற்ப பம்பை மேளம் அடிக்கப்பட்டது. இந்த இசைக்கு ஏற்றபடி, 50க்கும் மேற்பட்டவர்கள் வள்ளி கும்மி, நடனம் ஆடினர்.
இந்த நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற தாசம்பாளையம் வள்ளிக்கும்மி ஆசிரியர் பத்திரப்பன் பங்கேற்று, இக்கலையானது இளைஞர், இளம் பெண்கள் மத்தியிலும், அவர்கள் மனதிலும் பதிய தொடங்கியுள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்று இன்னும் பல்வேறு கிராமிய கலைகள் உள்ளன. இந்த கலைகளையும் கற்று வருங்கால சந்ததியினருக்கு, கிராமிய கலையை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும், என்றார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் சரஸ்வதி அலங்காரத்தில் மகா சக்தி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.