பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
05:04
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
இக்கோயிலில் ஏப்.17 ல் பூச்சொரிதல் விழா நடந்தது. மறுநாள் மாலை கொடியேற்றி, காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தினசரி இரவில் அம்பாள் சர்வ அலங்காரத்தில் திருக்குளம் பவனி வருகிறார். மூன்றாம் திருநாளில் பொங்கல்விழா நடந்தது. நேற்று ஐந்தாம் திருநாளை முன்னிட்டு பால்குட திருவிழா நடந்தது. இன்று காலை கோட்டைக்கருப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு முடிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம்,பூத்தட்டுக்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். முக்கிய வீதிகளின் வழியாக பூமாயி அம்மன் கோயில் வந்தனர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் 8 வித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் வெள்ளி அங்கியில், சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால்அம்மனுக்கு பூச்சொரிந்தனர். பின்னர் நடந்த தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாட்டினை திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி சோழிய வெள்ளாளர் இளைஞர் குழுவினர் செய்தனர். ஏப்.26 இரவில் அம்மன் ரத ஊர்வலமும், ஏப்.27 காலையில் தீர்த்தவாரி மஞ்சள்நீராட்டும், இரவில் தெப்பத்திருவிழா, திருக்குள தீபவழிபாடும் நடைபெறும். பின்னர் காப்புக்களைந்து விழா நிறைவடையும்.