பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
06:04
திருமலை; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா மே 06 முதல் 08 வரை கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பரிணயோத்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ஸ்ரீனிவாசரின் தெய்வீக திருமண விழா மிகவும் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்த மூன்று நாள் நிகழ்வில், முதல் நாளில் கஜவாகனத்திலும், இரண்டாவது நாளில் அஸ்வ வாகனத்திலும், கடைசி நாளில் கருட வாகனத்திலும் ஸ்ரீ மலையப்ப சுவாமி அருள்பாலிப்பார். இந்த மூன்று நாட்களில் அர்ஜித பிரம்மோத்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. புராணங்களின்படி, சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கலியுகத்தின் ஆரம்ப நாட்களில், ஸ்ரீ மகா விஷ்ணு வைகுண்டத்திலிருந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரராக பூமிக்கு வந்தார். அதனை முன்னிட்டு திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில், ஒவ்வொரு வைசாக சுத்த தசமி திதிக்கும் ஒரு நாள் முன்பும், ஒரு நாள் கழித்தும், மூன்று நாட்களுக்கு பத்மாவதி பரிணயோத்சவத்தை தேவஸ்தானம் சிறப்பாக கொண்டாடுகிறது.