ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டிய இரண்டாம் ராஜராஜசோழனின் ஓவியம் வெளியிட்ட வரலாற்று ஆய்வாளர்கள்
பதிவு செய்த நாள்
25
ஏப் 2025 05:04
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், 12ம் நுாற்றாண்டில், இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட கோவில். இரண்டாம் ராஜராஜசோழன் சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளில், பிறந்ததாக கோவில் கல்வெட்டு கூறுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில், இரண்டாம் ராஜராஜ சோழன், சித்திரை உத்தரட்டாதி விழா நடைபெற்றது. விழாவுக்கு, தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் தலைமை வகித்தார். வக்கீல் வைத்தியநாதன், திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக தொல்லியியல் துறை உதவி பேராசிரியர் முருகன், கும்பகோணம் அரசு பெண்கள் கல்லுாரி ஸ்ரீவித்யா ஆகியோர் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள இரண்டாம் ராஜராஜ சோழனின் கற்சிலை உருவத்தை, அடிப்படையாக கொண்டு, முதன்முறையாக பல வண்ணங்களில் வரையப்பட்ட ஓவியமும், விழா மலரும் வெளியிடப்பட்டன. கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க நிறுவனத் தலைவர் கோபிநாத், கோவில் பிரகாரங்களில் உள்ள சிலைகள், அதன் வடிவங்கள், அரிய வகைசிற்பங்கள் உள்ளிட்டவைகளை விழாவில் பங்கேற்றவர்களிடம் விளக்கினார். வரலாற்று ஆய்வாளர் செல்வராஜூக்கு, ராஜ கம்பீர விருது வழங்கப்பட்டது. இவ்விழாவையொட்டி் மூலவரான ஐராவதீஸ்வரர் மற்றும் தெய்வநாயகி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. இது தொடர்பாக கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க நிறுவனத் தலைவர் கோபிநாத் கூறியதாவது: இரண்டாம் ராஜராஜசோழனுக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜென்ம நட்சத்திர விழா நடந்தது. இரண்டாம் ராஜராஜசோழன் பிறந்த சித்திரை உத்திரட்டாதி நட்சத்திர விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் முதல்வரை சந்தித்து அரசு விழாவாக அறிவிப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். முதல்வரும் அரசு பரிசீலனை செய்யும் என கூறியது மகிழ்ச்சி அளித்தது. ஆனால், அது தொடர்பான அறிவிப்பு இல்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.
|