பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
10:04
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் இன்று நடைபெற்றது. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்தனர்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில், விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்;தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஏழாம் நாளான கடந்த 24ம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார்.
எட்டாம் நாளான நேற்று தங்ககுதிரை வாகனத்தில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், ஒன்பதாம் நாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கிளி மாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்;பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 6.30. மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு முக்கிய வீதிகளை திருத்தேர் வலம் வந்தது. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.