பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
10:04
கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..; உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் என்றாலும் கோச்சார சஞ்சாரத்தின் போது சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவராகிறார்கள். கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு லாப ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.
இதனால் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு லாபங்களை வழங்கக் கூடியவராகவும், முன்னேற்றத்தை உண்டாக்கக் கூடியவராகவும் யோகப் பலன் வழங்க உள்ளார். 2,3,4ம் பாதத்தினருக்கு தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, பதவிக்கு ஆபத்து, வருமானத்தில் தடை, பொருளாதார நெருக்கடி என பலன் தருவார்.
கேது, கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு, குடும்பத்தில் பிரச்னை, வாழ்க்கைத் துணையாலும் பிள்ளைகளாலும் கவலை, சிலருக்கு கருச்சிதைவு, பிள்ளைகளுக்கு தோஷம், எதிரிகளால் தொல்லை என்ற நிலையையும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு தாயாரின் உடல் பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம், உடல்நிலையில் கோளாறு, தவறான நட்பால் பொருளாதார இழப்பு, கவுரவத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் வீடு, வாகனம், சொத்து போன்றவற்றை விற்று சமாளிக்க வேண்டிய நிலையையும் தருவார். சிலர் விபத்திலும் சிக்க நேரும்.
சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில், சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். மார்ச் 6, 2026ல் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை யோகப்பலன் வழங்குவார். வருமானத்தை அதிகரிப்பார், தொழிலை முன்னேற்றுவார், செல்வாக்கை அதிகரிப்பார். அதன் பிறகு விரயச் செலவுகளை உண்டாக்குவார், முயற்சியில் பின்னடைவு, எதிர்பாராத சங்கடத்தை ஏற்படுத்துவார், மருத்துவச் செலவை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, வருமானத்தில் தடை, சிலருக்கு வேலை இழப்பினையும் ஏற்படுத்துவார். மார்ச் 6 முதல் இந்நிலை மாறும். தடைபட்ட வேலை நடந்தேறும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும், நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும், குடும்பத்தில் நெருக்கடி விலகும்.
குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ. 18 முதல் அங்கு வக்கிரம் அடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மே26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். என்பதால் 1ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார், வருமானத்தை உயர்த்துவார், சொத்து சுகங்களை உண்டாக்குவார். திருமண வயதினரின் கனவை நனவாக்குவார். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமண வாழ்வை தருவார், பணப்புழக்கத்தை அதிகரிப்பார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொடக்கத்தில் அலைச்சலை அதிகரிப்பார், திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என கனவை நனவாக்குவார் அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இல்லாமல் செய்வார். இழுபறி வழக்குகளில் வெற்றி அளிப்பார். செல்வாக்கை உயர்த்துவார், தொழிலில் முன்னேற்றத்தை, லாபத்தை உண்டாக்குவார். வேலை தேடி வந்தவர்களின் முயற்சியை வெற்றியாக்குவார்.
பொதுப்பலன்: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், சனியும், குரு பகவானின் பார்வைகளும் லாபத்தை உண்டாக்குவர். வாழ்க்கை, குடும்பம், தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். செயல்களில் ஆதாயத்தையும், ஆடை ஆபரணச் சேர்க்கையையும் வழங்குவர். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி வைப்பர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் 2026 மார்ச் 6 முதல் லாப சனியால் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வைகளால் எடுத்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். புதிதாக சொத்து சேரும். பட்டம், பதவி கிடைக்கும். பணப்புழக்கம் உண்டாகும் என்றாலும் சிம்ம கேதுவால் சின்னச்சின்ன பிரச்சினைகளும் சோதனைகளும் உண்டாகும்.
தொழில்: கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு தொடர்ந்து ராகுவும், மார்ச் 6 வரை சனியும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், மார்ச் 6 முதல் சனியும் யோக பலன்களை வழங்குவார். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும், புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நெருக்கடிகள் நீங்கும். ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், ஜூவல்லரி தொழில் முன்னேற்றமடையும். லாபம் தரும்.
பணியாளர்கள்: வேலையில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது. உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை, பொறுப்பு இல்லை என வருந்தியவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றமும் உயர்வும் கிடைக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். செல்வாக்கு உயரும். கணவரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் வந்தாலும் சரியாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணி இடத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணையை இழந்தவர், பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும்.
கல்வி: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு மே 11 க்கு பிறகும், 2,3,4 ம் பாத்த்தினருக்கு மே 11 வரையிலும் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் வெற்றி கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் நிலை உண்டாகும்.
உடல்நிலை: கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை ஆயுள் காரகனின் பார்வை ராசிக்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் உண்டாகிறது. 2,3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் ராசிக்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் ஆயுள் காரகனின் பார்வை உண்டாகிறது என்பதால் இக்காலத்தில் உடல் நலிவு, பிணி, விபத்து மருத்துவச் செலவு ஏற்படும்.
குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி விலகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய சொத்து சேரும். வாகனம், வீடு வகையில் கனவு நனவாகும். பொன், பொருள் சேரும், பிள்ளைகளுக்காக செலவு கூடும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் ஆலோசனையை மற்றவர் ஏற்று செயல்பட நன்மை அதிகரிக்கும்.
பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
ரோகிணி: விடாமுயற்சியால் லாபம்..; லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து நன்மைகள் வழங்கிய ராகு ஏப். 26ல் 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது 4 ம் இடமான சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.
தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம் என்னும் 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, தொழிலில் நெருக்கடியை ஏற்படுத்துவார். எனவே தொழிலில் அதிக அக்கறை தேவை. உழைப்பு அதிகமாக இருந்தாலும் ஆதாயம் குறைவாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் எதற்காகவும் சோர்ந்து போக மாட்டீர்கள். சரியான திட்டங்களைத் தீட்டி செயல்படுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கவும் இயந்திரம் வாங்கவும் வசதி உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அரசு உதவி கிடைக்கும். பணியாளர்கள் சில தடைகளையும் சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். நண்பர்கள், உறவினர்களால் உதவி கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாகும்.
கேதுவின் 4 ம் இட சஞ்சாரத்தால், தாயாரின் உடல்நிலையில் கூடுதல் சங்கடம் ஏற்படும். மருத்துவச் செலவால் கையிருப்பு கரையும். பணியாளர்கள் வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகும். எதிலும் வீண் அலைச்சல், தேவையில்லா சங்கடங்கள் தோன்றும். உங்கள் உடல் நிலையிலும் அடிக்கடி கோளாறுகள் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகமாகும். தவறான நண்பர்களின் சேர்க்கையால் ஒழுக்கத்திற்கு மாறான செயல்களும் சிலருக்கு ஏற்படும்.
சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில், சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். மார்ச் 6, 2026ல் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் மார்ச் 6 வரை வேலையில் நெருக்கடி, பிரச்னைகள், வேலையை விட்டு விடலாமா என்ற எண்ணம் உருவாகும். வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலும் முதலீட்டிற்கு ஏற்ற லாபம் இல்லாமல் சங்கடத்தை ஏற்படுத்தும். வருமானம் தடைபடும். பொருளாதார நெருக்கடி ஏற்படும். மார்ச் 6 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் இந்நிலை மாறும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அனைத்திலும் லாபம் என்ற நிலை உண்டாகும். நினைத்ததை சாதிக்க முடியும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும்.
குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக். 8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ. 18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். 2026 மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். ரிஷபத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என்ற கனவை நனவாக்குவார். உயர் கல்விக்குரிய வாய்ப்பை வழங்குவார். மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வியாபாரம் தொழில் வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எதிரி தொல்லையில் இருந்து பாதுகாப்பார். உடல் பாதிப்புகளை இல்லாமல் செய்வார். இழுபறி வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார், உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். வேலை தேடி வந்தவர்களின் முயற்சியை வெற்றியாக்குவார்.
பொதுப்பலன்: வியாபாரம், தொழில், வேலையில் நெருக்கடி ஏற்பட்டாலும் அதையெல்லாம் சமாளிப்பீர்கள். செல்வாக்கு உயரும். புதிய சொத்து சேரும். 2026 மார்ச் 6 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் நெருக்கடி விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைப்பது நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வருமானம் பல வகையிலும் வரும். குரு பகவானின் பார்வைகளால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சொத்து சேரும். அரசியல்வாதிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
தொழில்:
தொழில் காரகன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் ராகுவும் அங்கே சஞ்சரிப்பதால் சிறிய முயற்சியும் பெரிய லாபம் தரும். செய்து வரும் தொழில் விரிவடையும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், சினிமா, சின்னத்திரை, யூடியூப், மினரல் வாட்டர், மோட்டார் சாதனங்கள் தயாரிப்பு, வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், தோல் தொழிற்சாலை, கிரானைட்ஸ், பிரிக்ஸ் தொழில்கள் முன்னேற்றம் அடையும். லாபம் கொழிக்கும்.
பணியாளர்கள்: தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு வேலைப்பளு இருக்கும் என்பதால் வேறு முயற்சி மேற்கொள்ள வேண்டாம். இருக்கும் இடத்தில் நிர்வாகத்தின் முடிவிற்கேற்ப செயல்படுவது நன்மையாகும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வில் தடைகள், வேலையில் பிரச்னை ஏற்பட்டாலும் மிதுன குரு காலத்தில் உங்கள் கனவு நனவாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உயர்வும் கிடைக்கும்.
பெண்கள்: ஜீவன, சுக ஸ்தானங்களில் பாப கிரகங்கள் சஞ்சரித்து, பார்த்து வரும் வேலையிலும், மன நிம்மதியிலும் இடையூறுகளை உண்டாக்கினாலும் குருவின் பார்வைகளால் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவரின் ஆலோசனை நன்மை தரும். உடல்நிலையில் சங்கடங்கள் வந்தாலும் சரியாகும். சுயதொழில் செய்வோருக்கு முன்னேற்றம் உண்டாகும்.
கல்வி: மே11 வரை ஐந்தாம் இடத்திற்கு குருபார்வை இருப்பதால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய மேற்படிப்பில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது சஞ்சரிப்பதாலும், 2026 மார்ச் 6 முதல் ராசிக்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் ஆயுள் காரகனின் பார்வை உண்டாவதாலும் உடல் நிலையில் ஏதேனும் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். சிலர் விபத்திலும் சிக்குவீர்கள். தொடர்ந்து மருத்துவ செலவு இருந்து கொண்டே இருக்கும்.
குடும்பம் குடும்பத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வீர்கள். புதிய வாகனம், சொத்து வாங்குவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளின் மேற்கல்விக்காக செலவு செய்வீர்கள். பொன், பொருள் சேரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
பரிகாரம்: காளஹஸ்தியில் ராகு, கேது பரிகாரம் செய்ய நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம்: நல்ல காலம் வந்தாச்சு..; உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் என்றாலும் கோச்சார சஞ்சாரத்தின போது அவர்கள் இருவரும் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகிறார்கள். மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு ஜீவன ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு முயற்சி ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.
இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். கலைத்தொழிலில் யோகத்தை வழங்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். 3,4ம் பாதத்தினருக்கு தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தந்தையிடமிருந்து பிரிந்து செல்லும் நிலையை உண்டாக்குவார். முயற்சிகள் இழுபறியாகும். எல்லாவற்றிலும் போராட்டம், உடல்பாதிப்பு, விபத்து என்று ஏற்படும்.
கேதுவால் மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் நிம்மதியின்மை, உடல் பாதிப்பு, வீடு, வாகனம், சொத்துக்களை விற்று கடனை அடைக்க வேண்டிய நிலை, தீயவர் நட்பால் தவறான பாதைக்கு சென்று சட்ட சிக்கல்களுக்கு ஆளாகும் சூழல், தாயாரின் உடல் பாதிப்பு, விபத்து என்ற நிலையையும், 3, 4 ம் பாதத்தினருக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றி, தொழிலில் ஆதாயம், ஆரோக்கியத்தில் முன்னேற்றம். குடும்பத்தில் மகிழ்ச்சி, புதிய வாகனம், சொத்து என்ற நிலையுடன் துணிச்சலாகவும் தைரியமாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் சூழல்களை உண்டாக்குவார்.
சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில், சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். அங்கிருந்து மார்ச் 6, 2026ல் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை வேலையில் பிரச்னைகள், வியாபாரத்தில் நெருக்கடி, உழைப்பிற்கேற்ற முன்னேற்றம் இல்லை என்ற கவலை, சிலருக்கு வேலைக்கு ஆபத்து, பொருளாதார நெருக்கடி ஏற்படும். மார்ச் 6 முதல் இந்நிலையில் மாற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி, தொழிலில் ஆதாயம், வியாபாரத்தில் முன்னேற்றம். வேலையில் எதிர்பார்த்த மாற்றம், பதவி உயர்வு, தடைபட்டிருந்த வேலைகள் மீண்டும் தொடக்கம். பணப்புழக்கம், அந்தஸ்து, செல்வாக்கு, குடும்பத்தில் நிம்மதி என்ற நிலை உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை அனைத்திலும் லாபம், வீடு, வாகனம், சொத்து சேரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் லாபம் தரும். எதிரி தொல்லையில் இருந்து விடுதலை, வழக்கில் வெற்றி, பெரிய மனிதர்களால் ஆதாயம், அந்தஸ்து, செல்வாக்கு என முன்னேற்றம் ஏற்படும். மார்ச் 6 முதல் எதிர்பாராத நெருக்கடி, வீண் பிரச்னை, வருவாயில் தடை, வேலையில் சிக்கல் என முன்பிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும்.
குரு சஞ்சாரம்: மே11 வரை ரிஷபத்திலும், அதன் பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால் 1,2 ம் பாதத்தினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, வேலை வாய்ப்புகளையும், அதன்பின் ஆரோக்கியத்தில் மேன்மை, தொழிலில் முன்னேற்றம் என்ற நிலை உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண் செலவு, அலைச்சல் ஏற்பட்டாலும் குடும்பத்தில் நிம்மதி, புதிய வீடு வாகனம், வழக்கில் வெற்றியும் அதன்பின் திருமணம், குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்து, வீடு, வாசல் என்ற நிலை உண்டாகும்.
பொதுப்பலன்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 2026 மார்ச் 6 முதல் லாப சனியும் நன்மைகளை வழங்குவர். குடும்பம், உடல்நிலை, வேலை, தொழில் முன்னேற்றமடையும். 3, 4 ம் பாதத்தினருக்கு மூன்றாமிட கேதுவும், 2026 மார்ச் 6 வரை சனியும், குருபார்வையால் முயற்சிகள் வெற்றி பெறும். முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடியும். வசதி வாய்ப்பு பெருகும். குழந்தை பாக்கியம், உயர் கல்வி, திருமணம், வீடு, வாகனம் என எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தொழில்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 2026 முதல் லாப சனியும், 3, 4 ம் பாதத்தினருக்கு கேதுவின் சஞ்சாரமும், 2026 மார்ச் 6 வரை சனியும், குருவின் பார்வைகளும் முன்னேற்றத்தை வழங்க இருப்பதால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். குடிநீர், விவசாயம், பெட்ரோலியம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், ஜூவல்லரி, மருத்துவம், நோட்டு புத்தகம், காலண்டர் தயாரிப்பு போன்ற தொழில்கள் முன்னேற்றம் அடையும். அறுவை சிகிச்சை மருத்துவர்கள், ஆசிரியர்கள் கலைஞர்கள் படைப்பாளர்கள் ஆகியோர் லாபம் காண்பர். சிலருக்கு புதிய தொழில் உண்டாகும்.
பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட சிரமங்கள் முடிவிற்கு வரும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருக்கும் சிலர் நிரந்தரமாவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிர்வாகத்தின் சொல்படி நடப்பதால் முன்னேற்றம் உண்டாகும்.
பெண்கள்: இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், உயர்கல்வி, வேலை என எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவரின் ஆதரவால் அனைத்தையும் சமாளிப்பீர்கள்.
கல்வி: பொதுத்தேர்வு எழுதி இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொறியியல், அக்ரி துறைகளை எதிர்பார்த்தவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.
உடல்நிலை: மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு கேது 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஒன்று போய் ஒன்று என்று ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும். சிலர் விபத்திலும் சிக்க நேரும் என்பதால் எச்சரிக்கை அவசியம். 3,4ம் பாதத்தினருக்கு தொடர்ந்து உபாதைகளை உண்டாக்கி வந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
குடும்பம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். சொத்து சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். கடந்த கால நெருக்கடிகள் இல்லாமல் போகும். புதிய வாகனம், வீடு, சொத்து, பொன் பொருள் சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட நன்மைகள் உண்டாகும்.